REM “டெஸ் சோர்சஸ்” (Des Sources REM station) அதிவேகத் தொடருந்து நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்கு நேரடியாகப் பயணிக்கும் புதிய 815 இலக்க பிரத்தியேகப் பேருந்து சேவை, எதிர்வரும் 17 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
மொண்ட்ரியால்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்திற்கு (YUL) பயணிக்கும் பயணிகளுக்கும் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் கோடைகாலப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலேயே, இந்த பிரத்தியேகப் பேருந்து சேவை புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளது. மொண்ட்ரியால் விமான நிலையக் கூட்டமைப்பு (ADM), பிராந்தியப் போக்குவரத்து வாரியம் (ARTM), மொண்ட்ரியால் போக்குவரத்துச் சபை (STM) மற்றும் சிடிபிகியூ இன்ப்ரா (CDPQ Infra) ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த புதிய போக்குவரத்துத் திட்டத்தை அறிவித்துள்ளன.
இந்த முழுச் சேவைக்கான செலவினங்களையும் விமான நிலைய நிர்வாகமே (ADM) முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளது. வாரத்தின் 7 நாட்களும், சாதாரண நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இப்பேருந்து சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


