அல்பர்ட்டா (Alberta) மாகாணம் ஒரு தனிநாடாகப் பிரிந்து சென்றாலும், அங்குள்ள குடியிருப்பாளர்கள் தங்களின் கனடிய குடியுரிமையையும் (Canadian Citizenship) கனடிய கடவுச்சீட்டுகளையும் (Passports) தொடர்ந்து பயன்படுத்த முடியும் என, சில பிரிவினைவாத அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
இந்தக் வாதங்களில் சட்டபூர்வமான உத்தரவாதம் எதுவும் இல்லை என்று அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரிப்பதற்கான சட்டபூர்வமான நடைமுறைகளைத் தொடங்குவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய மக்கள் கருத்துக்கணிப்பு (Referendum) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான விவாதங்கள் தற்போது அல்பர்ட்டா மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அல்பர்ட்டா மாகாணத்தின் முதன்மையான பிரிவினைவாதக் குழுக்களில் ஒன்றான ‘அல்பர்ட்டா பிராஸ்பெரிட்டி புராஜெக்ட்’ (Alberta Prosperity Project – APP) ஆனது, தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், தவறான தகவல்களைத் தெரிவிக்கின்றது.
“ஒருமுறை கனடியக் குடிமகனாக இருந்தால், எப்போதும் குடிமகன் தான்” எனவும் ”சட்டம் மாற்றப்படாதவரை அல்பர்ட்டா தனிநாடானாலும் கனடியக் குடியுரிமையும் கடவுச்சீட்டும் அல்பர்ட்டா மக்களிடமே இருக்கும்” எனவும், தவறான பிரச்சாரத்தை அந்தக் குழு செய்து வருகிறது.
மேலும், அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) நடைமுறையை இதற்கு உதாரணமாகவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
