இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் கூறினார். அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டமே அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மேலும், மாத்தறை, காலி, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் கணிசமான அளவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவான மொத்த நோயாளர்களில் சுமார் 80% பேர் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இன்று (05) மேலும் ஒரு டெங்கு மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டின் மொத்த டெங்கு மரண எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 5 ஆண்களும், 15 பெண்களும் அடங்குகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025 ஆம் ஆண்டில் டெங்கு காரணமாக 29 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
