மொன்றியல் நகரில் உள்ள பிரபல தொடக்கப் பள்ளி ஒன்றிற்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பை அடுத்து, அப்பள்ளி அவசர அவசரமாக முடக்கப்பட்டதுடன் பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் தீவிர சோதனைக்கும் உள்ளாக்கப்பட்டது.
மொன்றியல் நகரின் Côte-des-Neiges—Notre-Dame-de-Grâce வட்டாரத்தில் அமைந்துள்ள ‘செயின்ட் மோனிகா தொடக்கப் பள்ளியின் வளாகமே, முடக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளியில் இருந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், தற்காலிகமாக தெருவின் எதிரே அமைந்துள்ள ‘மெக்கே மையத்திற்கு’ (Mackay Centre) பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மொன்றியல் காவல்துறையினர், பள்ளிக்குரிய கட்டிடம் முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் கண்டறியப்படாததைத் தொடர்ந்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த முடக்கநிலை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.