தற்போது, மத்திய அரசு தயாரித்து வரும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய தேசிய கொள்கைத் திட்டத்தில், உள்நாட்டுத் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கான துல்லியமான வழிகாட்டுதல்களைச் சேர்க்க வேண்டும் என, கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி வர்த்தக மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் (CEOs) கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், புதிய சட்டத்தை இறுதி செய்வதில் மத்திய அரசு நிதானப் போக்கைக்
கையாண்டு வருகிறது.
இதுகுறித்துக் கனேடிய செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் எவன் சொலமன் (Evan Solomon) கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் ஒரு சீரான கொள்கையை உருவாக்குவதற்கு, மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். புதிய கொள்கை வரைவை உருவாக்குவதற்காக, நாடு முழுவதிலுமிருந்து பெறப்பட்ட 11,000 க்கும் அதிகமான பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் 28 நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை, மத்திய அரசு தற்போது தீவிரமாக மறு ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
