கியூபெக் மசூதி படுகொலைகளின் முக்கிய குற்றவாளியான அலெக்சாண்டர் பிசோனெட் (Alexandre Bissonnette) தொடர்பான கணினி மற்றும் மின்னணுத் தரவுகளைத் தங்களுக்கு வழங்குமாறு அமெரிக்கப் பெடரல் வழக்கறிஞர்களும் எஃப்.பி.ஐ (FBI) உளவு அமைப்பும் கனடிய அரசிடம் உத்தியோகபூர்வமாக நீதிமன்றக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ (San Diego) பகுதியில் நடைபெற்ற இனவெறித் தாக்குதல்கள் குறித்த தீவிரவாத விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கிலேயே, இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு கியூபெக் நகரின் இஸ்லாமிய கலாச்சார மைய மசூதிக்குள் புகுந்து ஆறு பேரைச் சுட்டுக் கொன்ற பிசோனெட்டிடமிருந்து, கனடியப் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கணினி வன்வட்டுகள் (Hard Drives), இணைய தேடல் வரலாறுகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஆய்வு செய்வதற்காகவே, இந்த சர்வதேச சட்ட உதவி கோரப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் அமைந்துள்ள சான் டியாகோ யூத ஆலயத் தாக்குதல் மற்றும் அங்குள்ள மசூதி குண்டுவெடிப்புச் சம்பவங்களின் முக்கிய குற்றவாளியான ஜோன் டி. ஏர்னஸ்ட் (John T. Earnest) மீதான பயங்கரவாத வழக்கை அமெரிக்க நீதிமன்றத்தில் முன்னெடுப்பதற்கு, இத்தரவுகள் இன்றியமையாதவை என அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
கியூபெக் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்க உளவுத்துறையின் ஆவணங்களின்படி, கியூபெக் துப்பாக்கிச்சூட்டுக் குற்றவாளியின் டிஜிட்டல் ஆவணங்களே கலிபோர்னியா தாக்குதலுக்கு ஒரு வழிகாட்டியாக (Blueprint) இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
