மொன்றியலைத் தலைமையகமாகக் கொண்டு ‘மார்கோனி டெக்னாலஜிஸ்’ (Marconi Technologies) என்ற பெயரில் உருவெடுத்துள்ள இந்த புதிய இராணுவத் தற்காப்புத் தளவாட நிறுவனம், தனது அறிமுக விழாவை நடத்தியுள்ளது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனமான ‘கோபம் அல்ட்ரா’ (Cobham Ultra) நிறுவனத்தின் தந்திரோபாயத் தகவல் தொடர்புப் பிரிவை (Tactical Communications Division) முழுமையாகக் கையகப்படுத்தியதன் மூலமே, இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ‘நேஷனல் பேங்க்’ (National Bank) வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி லூயிஸ் வாச்சோன் (Louis Vachon) இந்த வர்த்தகக் கொள்முதலின் முதன்மை முதலீட்டாளராகச் செயல்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் நிர்வாகச் சார்பற்ற தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
1903 ஆம் ஆண்டு, அன்றைய கனடியப் பிரதமர் வில்frid லாரியரின் அழைப்பின் பேரில், கம்பியில்லாத் தந்தி முறையைக் கண்டுபிடித்த மார்கோனியால் கனடாவில் தொடங்கப்பட்ட ‘கனடியன் மார்கோனி கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் நேரடித் தொடர்ச்சியாகவே இந்த புதிய நிறுவனம் பார்க்கப்படுகிறது.
மொன்றியலில் சுமார் 300 பணியாளர்கள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் சர்வதேசப் பங்காளர்களின் முன்னிலையில் நடைபெற்ற அறிமுக விழாவில் உரையாற்றிய நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) அலைன் கோஹன், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மார்கோனி நிறுவனத்தை ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள மாபெரும் நிறுவனமாக மாற்றுவதே தங்களது இலக்கு எனப் பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
