மொன்றியல் மாநகரத்தின் நவீன தானியங்கி இலகுரக ரயில் வலையமைப்பான REM இன் புதிய ‘வெஸ்ட் ஐலண்ட்’ (West Island) கிளைப் பாதை, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
வான்கூவர் நகரின் ‘ஸ்கைட்ரெய்ன்‘ (SkyTrain) சேவைக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது மிக நீளமான வான்வழிப் பாலம் (Aerial Rail Network) கொண்ட ரயில் பாதையாக இந்த புதிய ரயில் வழித்தடம் வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளது.
14 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வான்வழிப் பாதையானது, மொன்றியலின் மேற்குப் புறநகர்ப் பகுதிகளான பாயிண்ட்-கிளෙயர், கிர்க்லாண்ட் மற்றும் செயின்ட்-அன்-டி-பெல்லிவ் ஆகிய பகுதிகளை மாநகரின் மையப்பகுதியுடன் (Downtown) வெறும் 30 நிமிடங்களுக்குள் இணைக்கிறது.
மக்கள் தங்களது வீடுகளில் இருந்து புதிய ரயில் நிலையங்களுக்கு எளிதில் வந்தடைவதை உறுதிசெய்யும் பொருட்டு, ‘சிடிபிஜியூ இன்ஃப்ரா’ (CDPQ Infra) நிறுவனம் மற்றும் ‘எஸ்டிஎம்‘ (STM) பேருந்து சேவைப் பிரிவு ஆகியன இணைந்து, போக்குவரத்துச்சேவை மாற்றத்தை மேற்கொண்டுள்ளன.
புதிய ரயில் நிலையங்களின் செயல்பாடுகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, கடந்த வார இறுதிநாட்களில் விசேட இலவச முன்னோட்டச் சேவை (Free Preview) வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
