யூகோன் (Yukon) மாகாணத்தில் உள்ள டாசன் நகரின் மிக முக்கிய அடையாளமாக விளங்கிய ‘வெஸ்ட்மின்ஸ்டர் ஹோட்டல்’ (Westminster Hotel) நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
நாட்டில் தங்க வேட்டை (Gold-rush) நிகழ்ந்த காலத்தின் வரலாற்றுப் பொக்கிஷமாகவும் திகழ்ந்த இந்த ‘வெஸ்ட்மின்ஸ்டர் ஹோட்டல்’ (Westminster Hotel) 125 ஆண்டுகள் பழமையானது என அறியப்படுகின்றது.
இந்த ஹோட்டல் கட்டிடமானது பெரும்பாலும் மரத்தினால் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9:26 மணியளவில், இந்த புகழ்பெற்ற ஹோட்டல் கட்டிடத்தில் திடீரென தீப்பற்றிக்கொண்டது.
தகவலறிந்து விரைந்த தீயணைப்புப் படையினர் பல மணிநேரம் போராடியும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மூன்று மாடிகளைக் கொண்ட அந்த வரலாற்றுச் சின்னம் முழுமையாக இடிந்து விழுந்தது.
இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
