கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய ‘பில் 101’ (Bill 101) மொழிச் சட்டத்தின் தாக்கம் இப்போது முதியோர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 27,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
இதுவரை ஆங்கில வழியில் முதியோர் கல்வி (Adult Education) மற்றும் தொழிற்பயிற்சி (Vocational Training) பெற்று வந்த மாணவர்களில், ஆங்கிலத்தில் கல்வி கற்க முறையான தகுதிச் சான்றிதழ் (Eligibility) இல்லாதவர்கள் இனி கட்டாயமாக பிரெஞ்சு மொழியிலேயே பயில வேண்டும் என, கியூபெக் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது குடியேறிகள், அகதிகள் மற்றும் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களைப் பெருமளவில் பாதித்துள்ளது. கணக்கியல், இயந்திரவியல் போன்ற தொழில்நுட்பப் பாடங்களை இதுவரை ஆங்கிலத்தில் கற்று வந்தவர்கள், இனி பிரெஞ்சு மொழியில் பாடங்களைக் கற்கவேண்டியதோடு பரீட்சையையும் அதே மொழியில் எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை தேடும் நோக்கில் குறுகிய காலப் பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களின் பயிற்சிமொழியை மாற்றியமை, அவர்களின் கல்வி கற்கும் வேகத்தைக் குறைக்கும் எனக் கருதப் படுகின்றது.
கடினமான தொழில்நுட்பப் பாடங்களைப் புரியாத மொழியில் கற்க வேண்டிய கட்டாயத்தால், பல மாணவர்கள் கல்வியைப் பாதியிலேயே கைவிடும் சூழல் உருவாகியுள்ளதாக, கியூபெக் கல்விச் சபைகள் எச்சரித்துள்ளன.
