முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட போது அவர்கள் இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் அவர்களை மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர்
நேற்று முந்தினம் 02.05.2026 காலை பத்து மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்காகச் சென்ற குறித்த இரு மீனவர்களும், நேற்று முன்தினம் (02)இரவு அல்லது நேற்று(03) அதிகாலையாவது கரை திரும்பியிருக்க வேண்டும் ஆனாலும் நீண்ட நேரமாகியும் குறித்த இரு மீனவர்களும் படகும் கரை திரும்பவில்லை.
இந்நிலையில் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் இணைந்து நேற்று (03)மாலை வரை நான்கு படகுகளில் சென்று தேடியும் அவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து காணாமல் போன மீனவர்களையும் அவர்களது படகினையும் தேடும் நோக்கில், முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று(04) காலை மீனவர்கள் பல படகுகளில் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போது இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் அவர்களை மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
