மொன்றியலின் பார்க்-எக்ஸ்டென்ஷன் (Parc-Extension) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 43 வயதுடைய பெண் ஒருவர் பலத்த காயமடைந்தமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 25 வயது இளைஞனை மொன்றியல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதிகாலை சுமார் 1:15 மணியளவில் செயின்ட்-ரோச் (Saint-Roch) மற்றும் கெர்பெஸ் (Querbes) வீதிகளின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வீதியைக் கடக்க முயன்ற பெண்ணின் மீது கார் மோதிய வேகத்தில் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் அதிகாலை முழுவதும் தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
