வடக்கு கியூபெக்கின் நுனாவிக் (Nunavik) பிராந்தியத்திலுள்ள சல்லுயிட் (Salluit) கிராமத்தில், ஈஸ்டர் ஞாயிறு அன்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இந்தத் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமை அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் ஒரு வீட்டில் தீப்பிடித்ததாக அவசரச் சேவைகளுக்குத் தகவல் கிடைத்தது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாகவும் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், மீட்புப் படையினரால் உடனடியாக வீட்டிற்குள் நுழைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மூவரின் உடல்கள் மீட்கப்பட்டதாக கியூபெக் மாகாணப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
