நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெய்ன் தலைமையில், மத்திய வங்கி ஆளுநர் டிப் மேக்லம் (Tiff Macklem) மற்றும் நாட்டின் முன்னணி வங்கித் தலைவர்களை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவினர் தற்போது சீனாவுக்குப் பயணித்துள்ளனர்.
2030-ஆம் ஆண்டிற்குள் சீனாவிற்கான கனேடிய ஏற்றுமதியை 50 சதவீதம் அதிகரிக்கும் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக இந்த விஜயம் பார்க்கப்படுகிறது.கனடாவின் வரலாற்றில் ஒரு வர்த்தகக் குழுவில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் பெரும் வங்கிகளின் தலைவர்கள் இணைந்து செல்வது இதுவே முதல் முறையாகும்.
சீனாவிலுள்ள மாபெரும் நிதிச் சந்தைகளில் கனேடிய வங்கிகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவதும், கனடாவில் சீன முதலீடுகளை அதிகரிப்பதும் இக்குழுவின் முக்கிய நோக்கமாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக வரி மிரட்டல்களுக்கு மத்தியில், நாட்டின் மத்திய அரசானது, தனது பொருளாதார வளர்ச்சியில் ஒரு பக்கமாக மட்டும் சார்ந்திராமல், சீனாவைப் போன்ற பெரிய சந்தைகளுடன் உறவைப் புதுப்பிக்க விரும்புகிறது.
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மார்க் கார்னி மேற்கொண்ட சீன விஜயத்தின் போது ஏற்பட்ட இணக்கப்பாட்டின் தொடர்ச்சியாக, மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கனேடியப் பொருட்களுக்குச் சீனா பெரும் சலுகைகளை வழங்கியுள்ளது.
கனேடியக் கனோலா(Canola) விதைகள் மீதான வரி 85 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் லொப்ஸ்டர் (Lobster), நண்டு மற்றும் பட்டாணி மீதான கூடுதல் வரிகளையும் சீனா நீக்கியுள்ளது.இதன் மூலம் சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக வாய்ப்பு கனேடிய விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
