கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள், மெக்சிகோவின் பிரபலமான சுற்றுலா நகரமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் (Puerto Vallarta) சிக்கியுள்ளனர்.
தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என, தற்போது அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ ராணுவத்தால் தேடப்பட்டு வந்த மிகப்பயங்கரமான போதைப்பொருள் கடத்தல் தலைவன் “எல் மென்சோ” (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது.
விடுமுறைக்காகச் சென்றிருந்த கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த கனடியர்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
கடைகளுக்குள்ளும், ஹோட்டல்களின் அடித்தளத்திலும் ஒளிந்துகொண்ட அவர்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொண்டனர்.
இதேவேளை, கியூபெக் மாகாண அமைச்சர் கிறிஸ்டோபர் ஸ்கீட், மெக்சிகோவில் உள்ள கியூபெக்வாசிகள் உடனடியாக, அங்குள்ள கனடியத் தூதரகத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும், வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
