மொன்றியல் நகரின் லோரியர் (Laurier) மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே நிகழ்ந்த கொலை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கடையில் (Dépanneur) பணிபுரிந்த 55 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவர், நேற்று காலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய ஒருவரை பொலிஸார் சில மணிநேரங்களிலேயே கைது செய்துள்ளனர்.
கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய அந்த சந்தேக நபர், பொதுப் போக்குவரத்து சேவையைப் (STM) பயன்படுத்தியமை, கண்காணிப்புக் கெமராக்கள் மூலம் கண்டறியப்பட்டது.
சந்தேக நபர் பச்சை நிற ‘டாலராமா’ (Dollarama) பை ஒன்றை ஏந்தியபடி ‘போட்ரி’ (Beaudry) மெட்ரோ நிலையத்தில் நிற்கும் காட்சிகள் பொலிஸாருக்குக் கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் பாதைகள் மற்றும் நிலையங்களில் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக பாப்பினோ (Papineau) மெட்ரோ நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
டவுன்டவுன் பகுதியில் உள்ள ‘கொம்ப்ளெக்ஸ் டெஸ்ஜார்டின்’ (Complexe Desjardins) வணிக வளாகத்திற்குள் வைத்து அந்தச் சந்தேக நபரை பொலிஸார் சுற்றிவளைத்தனர்
கைது செய்யப்பட்ட போது அந்த நபரின் கையில் ஆழமான வெட்டுக் காயம் இருந்ததால், அவர் முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
