நாட்டின் முக்கிய நகரங்களான டொராண்டோ, மொண்ட்ரியல் மற்றும் ஒட்டாவாவில் நேற்று வீசிய கடும் பனிப்புயல், அந்தந்த நகரங்களின் இலகுரக ரயில் (LRT) சேவைகளுக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தது.
சுமார் 35 சென்றிமீட்டர் பனிப்பொழிவு மற்றும் -28°C குளிர் நிலவிய சூழலில், ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது பணியிடங்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
ஒவ்வொரு நகரத்திலும் இந்த சவாலை போக்குவரத்துத் துறை கையாண்ட விதம் மாறுபட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் தொடங்கப்பட்ட டொராண்டோவின் எக்லிண்டன் கிராஸ்டவுன் ரயில் சேவை, இத்தகைய பனிப்புயலை முதல் தடவையாக எதிர்கொண்டது.
திறந்தவெளிப் பாதைகளில் பனி மூட்டம் காரணமாக ரயில்கள் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன.
சில இடங்களில் ரயில்சேவை நிறுத்தப்பட்டதால், பயணிகளின் வசதிக்காக மாற்றுப் பேருந்துகள் (Bus Bridges) இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
