கியூபெக் மாகாணத்தின் லோங்குயில் (Longueuil) பிராந்தியத்திற்கு உட்பட்ட புசர்விலில் (Boucherville) இரண்டு இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான ஆயுதத் தாக்குதலைத் தொடர்ந்து, லோங்குயில் பொலிஸார் பாரிய தேடுதல் நடவடிக்கையை நடத்தியுள்ளனர். ஈல் ஷாரோன் (Île Charron) தீவிலுள்ள நகராட்சி கடற்கரைப் பகுதியை முற்றுகையிட்டே பொலிஸார் இந்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர் (Person of interest) ஒருவரைப் பொலிஸார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் 17 வயதுடைய சிறுவன் என்றும், மற்றவர் 20 வயதுடைய இளைஞன் என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இருவருக்கும் உடலில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை (Non-life threatening injuries) என மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விபரங்களை வெளியிடப் பொலிஸார் மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.


