அரசியலமைப்பு சபையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சயின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்பதற்காக தேர்தலே நடத்தாமல் இருப்பது ஏற்க முடியாத ஒரு விடயம். அதனை அரசுக்கு சொல்லியிருக்கிறோம்.
அப்படி பார்த்தால் கடந்த இரு பாராளுமன்ற தேர்தல்கள் நடாத்தியிருக்க முடியாது.எனவே தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவது அடிப்படையான விடயம். அரசானது தேர்தலுக்கு முகம் கொடுக்க பயந்துகொண்டு மாகாணசபை தேர்தலை காலவரையின்றி பிற்போட்டுக்கொண்டிருப்பதாக தெரிகின்றது. முடிந்தால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள் என்று பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். வடகிழக்கில் அரசின் செல்வாக்கு பாரிய அளவு சரிவடைந்துள்ளது. மக்கள் தெளிவடைந்துள்ளனர். அதனை நடத்தினால் மண் கௌவ்வுவீர்கள் என சவாலாக சொல்லுகொள்கிறோம்.
