மொன்ட்ரியல் மேற்குப் பகுதியில் உள்ள பொது உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர், தனது தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்கில் இட்ட இஸ்ரேலுக்கு எதிரான பதிவுகள் காரணமாக, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
றோயல் வெஸ்ட் அகாடமி என்ற பள்ளியின் மாணவி மீதே, இந்த இடைநீக்கம் விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-காசா போரில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து, மாணவி கடந்த ஒரு மாதத்தில் இட்ட இரண்டு சமூக ஊடக அறிக்கைகளை மையமாகக் கொண்டே இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.
மேலும் கல்வித் தடைகள் வரலாம் என்ற கவலையால், தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத இந்த மாணவி, தனது தண்டனையை “தணிக்கை” என்று கூறி, கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாக எதிர்த்து வருகிறார்.
இந்த பள்ளியை மேற்பார்வையிடும் ஆங்கில மொன்ட்ரியல் பள்ளிச்சபை, இந்தப் பதிவுகள் ஒரு வெளிநாடு குறித்து “புண்படுத்தும்/பொருத்தமற்ற” கருத்துகளைக் கொண்டிருப்பதாகவும், பள்ளியின் கொடுமைப்படுத்துதல் மற்றும் வன்முறை எதிர்ப்புத் திட்டத்தை மீறும் வகையில் வசைச் சொற்களைப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் அந்த பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட முடிவை தான் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இடைநீக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பள்ளி சபைக்கு எதிராக ஒம்ப்யூட்ஸ்மேன் (Ombudsman) புகாரைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
