கனடாவில் யூத சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புணர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என, லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி ஹவுஸ்ஃபாதர் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 31 பேர் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
“கனடாவில் யூத எதிர்ப்பு மிகவும் சாதாரணமாகிவிட்டது” என்று அந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஒட்டாவாவில் உள்ள ஒரு கடையில், பகலில் ஒரு யூதப் பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் வெறுப்புணர்வின் காரணமாக நடந்த குற்றம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த 70 வயது மதிக்கத்தக்க அந்த யூதப் பெண் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் வெளிவந்துள்ள அந்தோனி ஹவுஸ்ஃபாதர்ரின் அறிக்கையானது, நாட்டில் யூத எதிர்ப்பு என்பது இயல்பானதாகிவிட்டது” என்று கூறுகிறது.
புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 2024-ஆம் ஆண்டில் யூதர்களுக்கு எதிராக 920 வெறுப்புக் குற்றங்கள் காவல்துறையிடம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
