இந்திய இளைஞர் ஒருவர்,கனடாவின் சிறிய ரக விமான விபத்தில் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நியூ ஃபவுண்ட் லேண்ட் மாகாணத்தின், டீர் லேக் பகுதியில் கடந்த ஜூலை 26 ஆம் திகதியன்று, பிரிட்டனைச் சேர்ந்த கிஸிக் ஏரியல் சர்வே நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 2 பேரும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த விபத்தில் பலியானவர்களின் பெயரை வெளியிட அந்நிறுவனம் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு, அரச அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் பலியானவர்களின் விவரங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்தில் பலியான 2 பேரில் ஒருவர், கௌதம் சந்தோஷ் எனும் இந்தியர் என்பது உறுதியாகியுள்ளதாக, டொரண்டோவிலுள்ள இந்தியத் தூதரகம் இன்று உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
