மொன்றியல் தென் கரையில் உள்ள பரந்த நிலப்பரப்பு தங்கள் முன்னோர்களுக்குச் சொந்தமானது என்று கனியன்’ கேஹா:கா (Kanien’kehá:ka) இனத்தைச் சேர்ந்த மோஹாக் கவுன்சில் ஆஃப் கான்வாக்கே (Mohawk Council of Kahnawà:ke – MCK) பழங்குடி மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட 345 ஆண்டுகள் பழமையான இந்த நில உரிமை கோரிக்கை, கனேடிய மத்திய அரசின் தாமதமான பேச்சுவார்த்தைகளால் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மொன்றியல் தென் கரையின் 97 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலங்கள் தங்களுக்குச் சொந்தமானது என மோஹாக் பழங்குடி மக்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
இந்த நிலப்பரப்பு கான்வாக்கேவின் தற்போதைய எல்லைகளுக்கு அப்பால் பல நகராட்சிகளை உள்ளடக்கியது.
கான்வாக்கேவின் எல்லைகளை ஒட்டி புதிய வீடுகளும் வணிக வளாகங்களும் கட்டப்பட்டு வருவதைக் காணும் கான்வாக்கே பழங்குடியினர், தங்கள் பல நூற்றாண்டு கால நில உரிமை தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நில உரிமை கோரிக்கை, “சால்ட் சென்ட் லூயிஸ் (SSSL) நிலக் கோரிக்கை” என அறியப்படுகிறது.
இப்பிரச்சனை தொடர்பில், கியூபெக் மாகாண அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பேச்சுவார்த்தைகள் மோஹாக் கவுன்சிலுக்கும் கனேடிய மத்திய அரசுக்கும் இடையே மட்டுமே நடைபெறுகிறது என்றும், மாகாண அரசு இதில் பங்கேற்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
