காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) உயிர்க்கொல்லியாகப் பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) எபோலா வைரஸ் திரிபுக்கு எதிரான ஆபிரிக்காவின் முதலாவது mRNA தடுப்பூசி மருத்துவப் பரிசோதனை உகண்டாவில் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின் ‘மொடர்னா’ (Moderna) நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தடுப்பூசி பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உகண்டா அரசின் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் (UVRI) வெள்ளிக்கிழமை (27.11.2026) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கனடாவில் 18 முதல் 65 வயதுடையவர்களிடம் மொடர்னா தனது முதலாவது மனிதப் பரிசோதனையை ஆரம்பித்திருந்த நிலையில், இது குறித்த தடுப்பூசியின் இரண்டாவது பரிசோதனையாகும்.
உகண்டாவில் நடைபெறும் இப்பரிசோதனையில், ஒரு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் திறன் முதன்முறையாகப் பரிசோதிக்கப்படவுள்ளதுடன், மொத்தம் 224 தன்னார்வலர்களை இணைத்துக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எபோலா பரவும்போது சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், ஆனால் புதிய தடுப்பூசிகளின் பயனைப் பெறுவதில் அவர்களே கடைசியாக இருப்பதாகவும் இதற்கு நிதியுதவி அளிக்கும் தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணியின் (CEPI) பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் ஹட்செட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புண்டிபுக்யோ திரிபுக்கு எதிராக இந்தியாவின் சீரம் நிறுவனம் (Serum Institute) மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கியுள்ள ‘ChAdOx1’ தடுப்பூசியின் பரிசோதனை திங்கட்கிழமை (30.11.2026) காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆரம்பமாகவுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் காங்கோ அரசின் அங்கீகாரம் கிடைத்தவுடன் விநியோகிக்கும் நோக்கில், சீரம் நிறுவனத்திடமிருந்து 1.5 மில்லியன் தடுப்பூசி டோஸ்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கவீ (Gavi) தடுப்பூசி கூட்டணி கடந்த வாரம் கைச்சாத்திட்டுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த மே மாத நடுப்பகுதியில் ஆரம்பமான எபோலா பரவலினால் இதுவரை குறைந்தது 12,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5,904 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
