அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்குக் கரையோரப் பகுதிகளில் ‘நன்றி தெரிவித்தல்’ (Thanksgiving) விடுமுறைக் காலத்தில் ஏற்பட்டுள்ள கடும் புயல் மற்றும் சீரற்ற வானிலை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
கிழக்குப் பகுதிகளில் வியாழக்கிழமை (26.11.2026) வீசிய பலத்த காற்று, கனமழை மற்றும் கரையோர வெள்ளப்பெருக்கு காரணமாகப் பென்சில்வேனியா, வர்ஜீனியா, மேரிலாந்து மற்றும் நியூஜெர்சி ஆகிய மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை மாலை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (27.11.2026) அதிகாலை நிலவரப்படி பென்சில்வேனியா மாகாணமே மின்வெட்டினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேரிலாந்து மாகாணத்தில் இடையிடையே ஏற்படும் மின்சாரத் தடையினால் குடிநீர் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், சுமார் இரண்டு மில்லியன் வாடிக்கையாளர்களை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே நீரைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, போக்குவரத்துத் துறையும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
வியாழக்கிழமை மாத்திரம் அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் இயக்கப்படவிருந்த 2,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளனடன், 450-க்கும் அதிகமான விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமையும் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயோர்க் உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், நியூயோர்க் நகரில் வருடாந்தம் நடைபெறும் புகழ்பெற்ற ‘மேசிஸ்’ (Macy’s) நன்றி தெரிவித்தல் அணிவகுப்பு வரலாற்றில் முதல்முறையாக சனிக்கிழமைக்கு (28.11.2026) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிப்புகளைச் சீர்செய்ய அவசரகால நிதியை விடுவிப்பது குறித்துப் பரிசீலிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், மேற்குக் கரையோரப் பகுதிகளான கலிபோர்னியா மற்றும் ஓரிகன் ஆகிய மாகாணங்களில் கடல் அலைகளின் சீற்றம் மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
சான் டியாகோ மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் 8 அடிக்கும் அதிகமான உயரத்திற்குக் கடல் அலைகள் எழுந்தமையால் கரையோரப் பகுதிகளைத் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கலிபோர்னியா கரையோரப் புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
