2019 உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மறைத்தல் மற்றும் விசாரணைகளைத் திசைதிருப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சலே மீதான விசாரணையில் புதிய தகவல்கள் நீதிமன்றில் வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ், சலே மற்றும் ஆசாத் மௌலானா ஆகியோர் 2020 ஓகஸ்ட் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் அஹுங்கல்லையில் உள்ள ஒரே விடுதியில் தமது குடும்பத்தினருடன் தங்கியிருந்ததை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பு தற்செயலானது என சலே ஆரம்பத்தில் கூறியிருந்த போதிலும், தொலைபேசி பதிவுகள் தொடர்பில் விசாரிக்கப்பட்டபோது அவரது நிலைப்பாடு மாறியதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ‘தம்பி அண்ணா’ என அழைக்கப்படும் தகவல் வழங்குநர், ஜஹ்ரான் ஹாஷிம் தொடர்பான தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கியிருந்ததாகவும், அந்தக் கோப்பு சலேயால் மறைக்கப்பட்டதாகவும் அரச தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், சலே தடுப்புக்காவலில் இருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவின் 31 பக்க அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் விளக்கங்கள் தொடர்பில் அரச தரப்புக்கும் பாதுகாப்புத் தரப்புக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிடுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தனது கருத்தை மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த போதிலும், அவரைக் கைது செய்வது தொடர்பான முடிவு புலனாய்வு அதிகாரிகளிடமே இருப்பதாகவும் தெரிவித்தார்.
வழக்கின் விசாரணை முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக, இவ்வழக்கு 2027 ஜனவரி 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
