ரொறன்ரோ நகரில் வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்களை எதிர்கொண்ட ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று 25ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ரொறன்ரோவின் Casa Loma பகுதியில், Poplar Plains Road மற்றும் Avenue Road – St. Clair பகுதிகளுக்கு அருகிலுள்ள வீடொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்படி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் குறித்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்த உரிமையாளரின் மகன், தனது காதலியுடன் அங்கு இருந்துள்ளார்.
வீட்டுக்குள் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு விசாரிக்கச் சென்ற அவர், கொள்ளையர்களை எதிர்கொண்டபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். படுகாயமடைந்த அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். வீட்டிலிருந்து ஏதேனும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டனவா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
