மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் 8 அரை பவுண் தாலிக்கொடியைத் திருடி, அதனை அடகு வைத்து 14 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்ட 22 வயதுடைய யுவதி ஒருவர் நான்கு மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் குறித்த யுவதி, தாலிக்கொடியைத் திருடியதுடன், வீட்டிற்கு அடிக்கடி வரும் உறவினரான பெண் மீது திருட்டுப் பழியைச் சுமத்தி அவரைக் கைது செய்யவும் காரணமாக இருந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அடகு வைக்கப்பட்ட தாலிக்கொடி தொடர்பான வங்கி விசாரணைகளின் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காதலனிடம் 14 இலட்சம் ரூபாவைக் கையளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட யுவதியை எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
