காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை சுமார் 25,000 முறைப்பாட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, அந்த அலுவலகத்தின் சபை உறுப்பினர் யோகராஜா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் கடந்த நவம்பர் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற 25,000 முறைப்பாடுகளில் 11,000 முறைப்பாடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசாரணைகளுக்காக 350 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 228 பேர் சமூகமளித்து தமது வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
முதலாம் நாள் 94 பேரும், இரண்டாம் நாள் 89 பேரும், மூன்றாம் நாள் நண்பகல் வரை 45 பேரும் விசாரணைகளில் பங்கேற்றுள்ளனர்.
விசாரணைகளில் பங்கேற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளும் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
