மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய மொழிகளைக் கடந்து இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் முன்னணி நடிகராக துல்கர் சல்மான் உயர்ந்துள்ளார்.
நடிகர் மம்மூட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் திரையுலகில் நுழைந்த போதிலும், தனது தனித்துவமான நடிப்பாலும் வித்தியாசமான கதைகளைத் தெரிவு செய்யும் திறமையாலும் சமீபகாலமாக அவர் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறார்.
அவரது திரைப் பயணத்தில் ‘பெங்களூரு டேஸ்’, ‘சார்லி’, ‘குரூப்’ மற்றும் ‘சீதா ராமம்’ ஆகிய திரைப்படங்கள் முக்கிய மைல்கற்களாக அமைந்தன.
குறிப்பாக, ‘சீதா ராமம்’ திரைப்படம் மொழிகளைக் கடந்து ஏராளமான ரசிகர்களை அவருக்குப் பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
சாதாரண வங்கி ஊழியராகத் தொடங்கி, பணம் சம்பாதிக்கும் ஆசையால் பல்வேறு சிக்கல்களில் சிக்கும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த இப்படம், உலகளவில் 110 கோடி ரூபா வசூலை ஈட்டியது.
நடிகராக மட்டுமன்றித் தயாரிப்பாளராகவும் களமிறங்கிய துல்கர் சல்மான், நல்ல கதைகளை அடையாளம் கண்டு தயாரிப்பதிலும் முத்திரை பதித்துள்ளார்.
அவரது தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான ‘லோகா சாப்டர் 1 சந்திரா’ திரைப்படம் 300 கோடி ரூபாவுக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை படைத்ததுடன் இந்திய அளவில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து வெளியான ‘ஐம் கேம்’ போன்ற திரைப்படங்களும் ஓரளவு வெற்றியைப் பெற்றன.
இந்நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஏ.ஓ.டி.’ (A.O.D.) திரைப்படம் நேற்று வெaளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
