மொன்றியல் நகரில் அமைந்துள்ள ‘யுனிவர்சிட்டி டி மொன்றியல்’ (Université-de-Montréal) மெட்ரோ நிலையத்தில், முகமூடி அணிந்த மர்மக் கும்பலொன்று நுழைந்து கட்டண வசூல் சாதனங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.
மொன்றியல் போக்குவரத்து வாரியம் (STM) வெளியிட்ட தகவலின்படி, இன்று (18.11.2026) அதிகாலை 5 மணியளவில் கருவிகளுடன் நிலையத்திற்குள் நுழைந்த நபர்கள், கட்டணக் கதவுகள், கட்டண வசூல் கருவிகள் மற்றும் ஊழியர் அறை ஆகியவற்றை இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மொன்றியல் நகரக் காவல் துறையினர் (SPVM) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், அந்த மெட்ரோ நிலையம் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்தச் சம்பவத்திற்கு ‘Le Conseil pour le maintien des hostilités’ என்ற அமைப்பு மின்னஞ்சல் மூலம் பொறுப்பேற்றுள்ளது.
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், தங்களது வாழ்க்கைச் செலவைத் தாங்களே குறைத்துக்கொள்ளும் நோக்கிலும் இந்தச் செயலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஏழைகளைத் தண்டிக்கும் வகையிலும், கட்டண முறைகளைக் கடுமையாக்கும் வகையிலும் மொன்றியல் போக்குவரத்து வாரியம் அதிகளவிலான பொலிஸாரைப் பணியமர்த்துவதை எதிர்த்தே தாங்கள் போராடுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
