கியூபெக் மாகாணத்திற்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிரிழப்புடன் கூடிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், நுனாவிக் பொலிஸ் சேவை அதிகாரிகள் குற்றவியல் குற்றம் எதனையும் புரிந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என கியூபெக் அரச தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நுனாவிக்கின் (Nunavik) சல்லூயிட் (Salluit) பகுதியில் இடம்பெற்றது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதி, மதுபோதையில் வாகனம் செலுத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்துச் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், இரண்டு ஆண்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக BEI அமைப்பின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் மின்சார அதிர்ச்சி வழங்கும் கருவி (Taser) மற்றும் மிளகுத் தூள் தெளிப்பான் (pepper spray) ஆகியவற்றைப் பயன்படுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரட்டைச் சகோதரர்களில் ஒருவரான ஜோசுவா பாபிகாடுக் (Joshua Papigatuk) உயிரிழந்தார்.
அவரது சகோதரர் கார்னெட் பாபிகாடுக் (Garnet Papigatuk) படுகாயமடைந்து தெற்கு கியூபெக்கில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக, கியூபெக்கின் சுயாதீன பொலிஸ் விசாரணைப் பணியகமான BEI சமர்ப்பித்த அறிக்கையை மீளாய்வு செய்ததன் பின்னரே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குற்றவியல் மற்றும் தண்டனை வழக்குகளுக்கான பணிப்பாளர் நாயகம் (Director of Criminal and Penal Prosecutions) தெரிவித்துள்ளார்.
இந்தப் பொலிஸ் தலையீட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, குறித்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், இது தொடர்பில் மேலதிக கருத்துக்களைத் தெரிவிக்கப் போவதில்லை எனவும், பணிப்பாளர் நாயகத்தின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
