கியூபெக் மாகாணத்தில் மின்சாரத்திற்கான தேவை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடந்த காலங்களை ஒப்பிடும்போது, கியூபெக் அரசின் மின்சார சேவை அமைப்பான ஹைட்ரோ-கியூபெக் நிறுவனத்தின் நிகர லாபம் சரிவைச் சந்தித்துள்ளது.
தொடர் வறட்சி காரணமாக அணைகளில் நீர்மட்டம் குறைந்ததைத் தொடர்ந்து, வெளி சந்தைகளில் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதே, இந்த இலாபக் குறைவிற்கான முக்கியக் காரணமாகும்.
ஹைட்ரோ-கியூபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டின் நிதியறிக்கையின்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 2.6 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 230 மில்லியன் டொலர்கள் குறைவு ஆகும்.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் அணைப் பகுதிகளில் நிலவிவரும் வரலாறு காணாத வறட்சி நிலை மற்றும் கடந்த குளிர்காலத்தில் நிலவிய தீவிரக் குளிர்காலச் சூழல் ஆகியவையே, இந்த நிதிச் சரிவுக்குப் பிரதான காரணங்களாகும் என ஹைட்ரோ-கியூபெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
