கியூபெக் மாகாணத்தின் கல்விச் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, நவம்பர் 13ஆம் திகதி மொன்றியலில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் காவல்துறையினர் தங்களைத் தாக்கியதாகவும், உரிய எச்சரிக்கையின்றிக் கண்ணீர்ப்புகை வீசியதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மூவர் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை, காவல்துறை தரப்பில் அதிகாரிகள் மீது பட்டாசு வீசப்பட்டதாகவும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் போராட்ட உரிமையை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ள கியூபெக் அரசாங்கம், வன்முறை மற்றும் சொத்துச் சேதங்களை கண்டித்துள்ளது. இதற்கிடையில், கல்வி நிதியை அதிகரிக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
