கியூபெக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியில் இனப்பாகுபாடு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பாடங்களுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கியூபெக்கின் தேசிய காவல் பயிற்சிப் பள்ளியில் புதிதாக இணையும் அதிகாரிகள் 15 வார காலப் பயிற்சியைப் பெறுகின்றனர்.
மொத்தம் 377 மணிநேரப் பயிற்சியில், பன்முகத்தன்மை மற்றும் இனப்பாகுபாடு தொடர்பான பாடங்களுக்கு வெறும் 11.5 மணிநேரமும், பழங்குடியின மக்களின் சமூக நிலைமைகள் தொடர்பான பயிற்சிக்கு மூன்று மணிநேரத்திற்கும் சற்று அதிகமான நேரமும் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இனவெறி மற்றும் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மொன்றியல் காவல்துறையைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கறுப்பின மற்றும் அரபு சமூகத்தினரைக் குறிவைத்துச் செயற்பட்டமை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பிலும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், காவல்துறைக்கு மேலதிகப் பயிற்சி வழங்குவது மட்டுமே இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்றும், காவல்துறையின் கட்டமைப்பிலேயே மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் குற்றவியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
