கியூபெக் மாகாணத்தில் உள்ள செயின்ட்-ஹியாகின்த் – பாகோட் – அக்டன் (Saint-Hyacinthe—Bagot—Acton) நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சைமன்-பியர் சவார்ட்-ட்ரெம்பிளே (Simon-Pierre Savard-Tremblay) தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளாக் கியூபெக் (Bloc Québécois) கட்சி சார்பில் கரோலின் எமாண்ட் (Caroline Émond) இத்தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான கியூபெக்கின் முன்னாள் பிரதிநிதியாகவும், சர்வதேச பால் கூட்டமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
லிபரல் கட்சி சார்பில், கியூபெக் மாகாணத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சான்டல் சூசி (Chantal Soucy) வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
அதேவேளையில், கன்சர்வேடிவ் கட்சி சார்பில் பிரபல முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரரும், பயிற்சியாளரும், தற்போதைய வானொலி ஒலிபரப்பாளருமான லூக் புரோடூர்-ஜூர்டைன் (Luc Brodeur-Jourdain) போட்டியிடுகிறார்.
நாடாளுமன்றத்தில் செல்வாக்குமிக்கதாகக் கருதப்படும் இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கியூபெக் அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
