கம்போடியாவின் தலைநகரான பெனாம்பென் நகரில் தொடங்கவுள்ள சர்வதேச பிராங்கோபோனி அமைப்பு (OIF) உச்சி மாநாட்டில், கியூபெக்கின் தனிநாடு கோரிக்கை குறித்து விவாதிக்கப் போவதில்லை என கியூபெக் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சர்வதேச உறவுகள் துறை அமைச்சரான தியூடொன் எலா ஓயோனோ (Dieudonné Ella Oyono), இது குறித்துக் கூறுகையில், பிராங்கோபோனி மாநாட்டில் கியூபெக்கின் சுதந்திரம் தொடர்பான விவகாரங்கள் எழும்ப வாய்ப்பில்லை என்றார்.
பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக வாய்ப்புகள் மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பிரதான பிரெஞ்சு மொழி பேசும் மாகாணமான கியூபெக்கில், நீண்ட காலமாக நிலவிவரும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால நிலைப்பாடுகள் குறித்து சர்வதேச அரங்கில் பல்வேறு விவாதங்கள் நிலவி வந்த நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பிராங்கோபோனி மாநாட்டின் ஒரு பகுதியாக, கியூபெக் முதல்வர் பிளமொண்டோன் மற்றும் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) முதலானோருக்கு இடையேயான சந்திப்பு ஒன்றும் நடைபெற உள்ளது.
சுமார் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தச் சந்திப்பில், புலம்பெயர்தல், வீடற்றோர் பிரச்சினை மற்றும் கலாசார விதிவிலக்குகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பிராங்கோபோனி மாநாட்டின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பிராந்தியத்தின் இறையாண்மை அல்லது தனிநாடு கோரிக்கை குறித்த கொள்கை விளக்கங்கள் இடம்பெறாது என, கியூபெக் அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளுக்கிடையேயான வர்த்தக மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே இம்முறை கியூபெக் பிரதிநிதிகளின் முதன்மைக் குறியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
