நாட்டின் தெற்கு ஆழ்கடலில் பயணித்த மீன்பிடிக் கப்பல் ஒன்றை இடைமறித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் பொட்டலங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையில், ‘யசிரு புத்தா’ என்ற பெயருடைய மீன்பிடிக் கப்பல் நவம்பர் 11ஆம் திகதி இடைமறிக்கப்பட்டு காலி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
கப்பலில் இருந்த ஆறு சாக்குகளில் 50-க்கும் மேற்பட்ட ஐஸ் பொட்டலங்களும், 52-க்கும் மேற்பட்ட ஹெராயின் பொட்டலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான உளவுத் தகவலின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு இடைமறிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சரியான எடை மற்றும் அளவைக் கண்டறிவதற்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
