தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில், அந்த விகாரையின் இயக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று, இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தையிட்டி பகுதியில் தொடரும் காணி ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு, தங்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக மீளப் பெற்றுக்கொள்வதையே, போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர். பௌத்த விகாரை அமைந்துள்ளதாகக் கூறப்படும் தனியார் காணியின் உரிமையாளர்களின் உரிமைகள் முறையாக மதிக்கப்பட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அனைத்தும் உரிய உரிமையாளர்களிடம் உடனடியாக மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
விகாரையில் விசேட வழிபாடுகள் தொடரும் அதேவேளை, வெளியே மக்களின் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டமை காரணமாக அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டமை குறிப்பிடத் தக்கது.
