கியூபெக் மாகாண குடியேற்ற அமைச்சகத்தில் முன்னாள் ஊழியர் ஒருவர் நூற்றுக்கும் மேற்பட்ட போலிக் குடியேற்றத் தெரிவுச் சான்றிதழ்களை (Quebec selection certificates) வழங்கியதாகக் கூறப்படும் ஊழல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கியூபெக் மாகாண குடியேற்றத்துறை அமைச்சர் கேத்தரின் ஜென்டில்கோர் (Catherine Gentilcore) தாம் “ஆழ்ந்த அதிர்ச்சி” அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இத்தகைய முறைகேடுகள் அரசு மற்றும் அமைச்சகத்தின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதாகவும்” அவர் கூறியுள்ளார்.
மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அவசியமான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், துறை சார்ந்த மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே, கியூபெக் குடியேற்ற அமைச்சகத்தின் முன்னாள் ஊழியர் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் முறையான அனுமதியின்றி நூற்றுக்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் ஊழியர் மரில்னா இடா (Marilena Ida) என்பவர், எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி மொன்றியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
