வடக்கில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோதத் தொழில் முறைமைகளைக் கட்டுப்படுத்தி, பாரம்பரியச் சிறுமீன்பிடி முறைமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு மகஜர் கையளிப்பதாக மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளன.
மீனவ சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
அதன்போது, வடக்குக் கடற்பரப்பில் நீண்டகாலமாக உள்ளூர் மீனவர்களினால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை என்பவற்றைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாத்தல், சட்டவிரோதமான மற்றும் ஒழுங்கற்ற முறையில் முன்னெடுக்கப்படும் அட்டைப் பண்ணைகள், டைனமைட் பயன்படுத்துதல், ஒளி பாய்ச்சி மீன்பிடித்தல், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் என்பவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலின் இறுதியில், குறித்த மீன்பிடி முறைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தி, பாரம்பரிய மீன்பிடி முறைமைகளை ஊக்குவித்து, மீன் வளங்களைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட கடற்றொழில் திணைக்களத்திடம் கோரி, அவர்களுக்கு மகஜர் அனுப்பி வைப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.
