பாரிஸ் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதலைத் தொடர்ந்து, தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் நாட்டில் இனவெறிச் சூழலை உருவாக்குவதாகப் பிரான்ஸ் அதிபர் எமானுவல் மெக்ரான் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரிஸின் தென்மேற்கே 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள திராப்ஸ் (Trappes) நகரில் 26 வயதான பெங்கோ போசியோ வாங்கி (Pengo Bossio Wangi) என்பவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரெஞ்சு அரசியலில் இனவெறி தொடர்பான தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன.
யூடியூப் நேர்காணலொன்றில் கருத்து தெரிவித்த அதிபர் மெக்ரான், மெரைன் லீ பென்னின் (Marine Le Pen) தேசிய அணி (National Rally) கட்சி மற்றும் அதற்கு நெருக்கமான இயக்கங்களே இத்தகைய பேச்சு சுதந்திரம் மற்றும் இனவெறிச் சூழலுக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.
இருப்பினும், இக்குற்றச்சாட்டைத் தேசிய அணி உடனடியாக மறுத்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக மெக்ரானின் ஆட்சியிலேயே வெறுப்புணர்வும் இனவெறியும் பரவியதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீன்-பிலிப் டங்குய் (Jean-Philippe Tanguy) பதிலளித்துள்ளார்.
சந்தேகநபரான 39 வயதான கெவின் டி (Kevin T) என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஆப்பிரிக்க அல்லது முஸ்லிம் பின்புலம் கொண்டவர்களை இலக்கு வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரிடமிருந்து ஹிட்லரின் புத்தகமும் தேசிய அணி தொடர்பான ஸ்டிக்கர்களும் கைப்பற்றப்பட்ட போதிலும், தான் எந்தவொரு குறிப்பிட்ட கட்சியையும் ஆதரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மெக்ரானின் சிறுபான்மை அரசாங்கமும் தீவிர வலதுசாரி கருத்துக்கள் சமூகத்தில் பரவுவதைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அத்துடன், கடந்த வாரம் பிரான்ஸின் பல நகரங்களில் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதல்களில் ஈடுபட முயன்றதாக அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.

