கனடாவின் நலன்களுக்குப் பொருத்தமானதாக இருந்தால் மட்டுமே எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதாகவும், தற்போதைய நிலையில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளும் சூழலில் கனடா இல்லை என்றும் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே பிரதமர் மார்க் கார்னி இதனைக் குறிப்பிட்டார்.
கனேடியர்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டதும், அதேவேளை அமெரிக்காவின் நலன்களுக்கும் உகந்ததுமான ஒப்பந்தங்களையே, ஒட்டாவா விரும்புவதாக அவர் கூறினார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் (Midterm Elections) எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகள் கடந்த சில நாட்களாகத் தெரிவித்து வருகின்றனர்.
“விரைவில் அந்த விவகாரம் தீர்த்து வைக்கப்படும்.” எனவும் ”இந்தத் தருணத்தில் அவர்கள் எங்களுக்கு எதையும் வழங்கத் தயாராக உள்ளனர்” என்றும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

