மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும், எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி இன்று செவ்வாய்க்கிழமை காணொளி ஊடாக பிள்ளையானை ஆஜர்படுத்தியதுடன், ஏனைய இரு சந்தேகநபர்களான முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பின் கல்லடி மற்றும் காத்தான்குடி பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட ஐந்து கொலைகள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, வழக்கில் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரான, லண்டனில் வசிப்பதாகக் கூறப்படும் முகமட் பாய்ஸ் என்றழைக்கப்படும் பொலிஸ் பாயிஸுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையைத் தொடர்ந்து அமுலில் வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

