கனடாவின் எதிர்கால அரசியல் நிலவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக, அல்பேர்ட்டா மாகாணத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
அல்பேர்ட்டா மாகாணம் கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது கனடாவிலிருந்து பிரிவது தொடர்பான சட்ட நடைமுறைகளை முன்னெடுப்பதற்கான வழியைத் திறக்க வேண்டுமா என்பதே இந்த வாக்கெடுப்பின் முக்கியக் கேள்வியாக அமைந்துள்ளது.
இன்று, ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெறும் இந்த வாக்கெடுப்பில், பிரிவினை தொடர்பான கேள்வி மட்டுமன்றி, குடியேற்றக் கொள்கை, மாகாண உரிமைகள், அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் வாக்காளர்களிடம் கருத்துக் கோரப்படுகிறது.
மொத்தமாகப் பத்து கேள்விகளுக்கு வாக்களிக்கும் வகையில் இந்த வாக்கெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அல்பேர்ட்டா கனடாவிலிருந்து பிரிவதற்கான சட்ட நடைமுறையைத் தொடங்க வேண்டுமா என்ற கேள்வி அரசியல் ரீதியாகப் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
எனினும், இன்றைய வாக்கெடுப்பு கனடாவிலிருந்து உடனடியாகப் பிரிவதற்கான இறுதி முடிவல்ல. இது, பிரிவினை தொடர்பாக எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் தனியான வாக்கெடுப்பை நடத்துவதற்கான நடைமுறையை ஆரம்பிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் கட்டுப்பாடற்ற வாக்கெடுப்பாகும்.
இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்கான முடிவை அல்பேர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் தலைமையிலான அரசாங்கம் எடுத்திருந்தது.
அல்பேர்ட்டாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்கள் மூலம் கிடைக்கும் வருமானம், மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் மாகாணத்தின் பொருளாதார நலன்கள் தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகளே இந்தப் பிரிவினை விவாதத்தின் முக்கிய பின்னணியாக உள்ளன.
குறிப்பாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்திக் கொள்கைகள் அல்பேர்ட்டாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதாகப் பிரிவினையை ஆதரிப்பவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதேவேளை, கனடாவிலிருந்து பிரிவது பொருளாதார நிச்சயமற்ற தன்மை, வர்த்தகச் சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான சவால்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்ப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரதமர் மார்க் கார்னியும் அல்பேர்ட்டா தொடர்ந்து கனடாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார். நாட்டின் ஒற்றுமையைப் பேணுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
அல்பேர்ட்டா தேர்தல் அதிகாரசபையின் ஆரம்பத் தரவுகளின்படி, ஒக்டோபர் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான முன்கூட்டிய வாக்களிப்பு மற்றும் விசேட வாக்குச் சீட்டு நடைமுறைகள் மூலம் மொத்தம் 13 இலட்சத்து 56 ஆயிரத்து 873 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது வாக்களிக்கத் தகுதியுடையவர்களில் சுமார் 43.1 சதவீதமாகும்.
இன்று வாக்களிப்பு நிலையங்கள் உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், முடிவுகள் படிப்படியாக வெளியிடப்படும் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிவினை தொடர்பான பத்தாவது கேள்வியின் வாக்குகள் முதலில் எண்ணப்படவுள்ளன. அதிகாரபூர்வ முடிவுகள் ஒக்டோபர் 29ஆம் திகதி அறிவிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பின் முடிவு, அல்பேர்ட்டாவின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை மட்டுமன்றி, மாகாண அரசாங்கத்திற்கும் கனடாவின் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளையும் தொடர்ந்து விவாதத்திற்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

