மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியைத் தடை செய்யுமாறும், அதற்கு உடந்தையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் கோரி மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு இலஞ்ச ஒழிப்பு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டில், இன்று காலை 9 மணியளவில் கல்லடியில் அமைந்துள்ள குறித்த திணைக்களத்திற்கு முன்னால் மீனவர்கள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர்.
இதன்போது, சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியை உடனடியாகத் தடை செய்ய வேண்டும், மட்டக்களப்பின் கடல் வளங்களை அழிக்கக்கூடாது, சட்டவிரோத மீன்பிடிக்கு உடந்தையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் மற்றும் இலஞ்சம் பெறாத நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அத்துடன், காத்தான்குடி, பாலமுனை மற்றும் பூனெச்சிமுனை பகுதிகளில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபடுவதாகக் கூறப்படும் வெளிமாவட்ட மீன்பிடித் தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும் என்றும், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளரிடம் கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காலை 11 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
