திருநங்கைகள் குறித்து இயக்குனர் மோகன்.ஜி பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகளை மனிதர்களாக மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
திருநங்கைகளைப் பற்றிப் பேசும் இப்படத்தை வெற்றி அடைய வைக்கக் கூடாது என்பதில் ஒரு பிரிவினர் ஆர்வத்துடன் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதைத் தாண்டி படம் வென்றுவிட்டதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது குழுவினர் காண்பித்த ஒரு வீடியோவைப் பார்த்து கோபமும் வருத்தமும் ஏற்பட்டதாகக் கூறினார்.
இயக்குனர் மோகன்.ஜி படம் குறித்த உரையாடலின்போது ஒரு திருநங்கையுடன் உரையாடியதாகவும், அப்போது அவர் திருநங்கையைப் பார்த்து திருமணம் முடிந்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அந்த திருநங்கை அன்பைப் பகிர்ந்து கொள்வோம், மகிழ்ச்சியாகத் துணையுடன் இருப்போம் எனத் தெளிவாக விளக்கம் அளித்த போதிலும், மோகன்.ஜி மற்றவர்களைப் போல உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற நோக்கத்தில் பேசியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது மிகப்பெரிய அவமானம் என்றும், எல்லோரையும் மனிதராகப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்த கார்த்திக் சுப்புராஜ், பொதுவெளியில் இப்படி ஒரு கருத்தை அவரால் சொல்ல முடிகிறது என்றால் அது வன்முறைதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மோகன்.ஜியின் இந்தச் செயலைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
