சமூக வலைத்தளப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், Facebook கணக்குகள் ஊடுருவப்படுவது தொடர்பான அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான சூழலில், உங்கள் கணக்கு Hack செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதுடன், அதனைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதும் அவசியமாகும்.
உங்கள் Facebook கணக்கு Hack செய்யப்பட்டதற்கான முக்கிய அறிகுறிகள்
உங்கள் அனுமதியின்றி Facebook கணக்கின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது கடவுச்சொல் மாற்றப்பட்டிருப்பது கணக்கு ஊடுருவப்பட்டிருக்கலாம் என்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.
அதேபோல், நீங்கள் பயன்படுத்தாத சாதனங்கள் அல்லது அறிமுகமில்லாத இடங்களிலிருந்து கணக்கில் உள்நுழைவுகள் இடம்பெற்றிருப்பது,
நீங்கள் வெளியிடாத பதிவுகள் தோன்றுவது, நண்பர்களுக்கு சந்தேகத்திற்கிடமான செய்திகள் மற்றும் இணைய இணைப்புகள் அனுப்பப்படுவது போன்றவையும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.
மேலும், உங்களுக்குத் தெரியாமல் புதிய நண்பர் கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருப்பது, Facebook கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள பயன்பாடுகளில் சந்தேகத்திற்கிடமான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது போன்றவற்றையும் அலட்சியப்படுத்தக் கூடாது.
உங்கள் முகநூல் கணக்கு Hack செய்யப்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
1. கடவுச்சொல்லை மாற்றவும்
கணக்கிற்குள் இன்னும் நுழைய முடிந்தால், உடனடியாக வலுவான புதிய கடவுச்சொல்லை அமைக்கவும். ஏனைய இணையத்தளங்களிலும் இதே கடவுச்சொல்லைப் பயன்படுத்தியிருந்தால், அவற்றின் கடவுச்சொற்களையும் மாற்றுவது அவசியமாகும்.
2. அறிமுகமில்லாத சாதனங்களிலிருந்து வெளியேறவும்
Facebook-இன் Accounts Center பகுதியில் உள்ள Password and security மற்றும் Where you’re logged in ஆகிய விருப்பங்களுக்குச் சென்று, அறிமுகமில்லாத சாதனங்களின் அமர்வுகளை (Sessions) முடிக்கவும். தேவையெனில் அனைத்து சாதனங்களிலிருந்தும் வெளியேறவும்.
3. அதிகாரப்பூர்வ வழியாகக் கணக்கை மீட்டெடுக்கவும்
கணக்கிற்குள் நுழைய முடியாவிட்டால், Facebook-இன் அதிகாரப்பூர்வ கணக்கு மீட்பு இணையத்தளமான https://www.facebook.com/hacked என்ற முகவரிக்குச் சென்று, அங்கு வழங்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
4. மின்னஞ்சல் கணக்கையும் பாதுகாக்கவும்
Facebook கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். அதன் கடவுச்சொல்லை மாற்றி, இரு காரணி அங்கீகார வசதியையும் (Two-Factor Authentication) செயற்படுத்துவது நல்லது.
உங்கள் முகநூல் கணக்கு மீண்டும் Hack செய்யப்படுவதைத் தடுப்பது எப்படி?
Facebook கணக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த Two-Factor Authentication (2FA) வசதியைச் செயற்படுத்துவது முக்கியமாகும். இதன் மூலம் கடவுச்சொல் தெரிந்திருந்தாலும், கூடுதல் சரிபார்ப்பு இல்லாமல் கணக்கிற்குள் நுழைவதைத் தடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அதேபோல், வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கிடமான செய்திகள், பரிசுப் போட்டி இணைப்புகள் மற்றும் போலியான Facebook உள்நுழைவுப் பக்கங்கள் மூலம் கடவுச்சொற்களைத் திருட முயற்சிக்கும் மோசடிகள் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மேலும், அறிமுகமில்லாத இணையத்தளங்கள் அல்லது செயலிகளுக்கு Facebook கணக்கின் அணுகல் அனுமதியை வழங்குவதைத் தவிர்ப்பதுடன், கணக்கின் பாதுகாப்பு அறிவிப்புகளையும் அவ்வப்போது சரிபார்ப்பது அவசியமாகும்.
முக்கிய எச்சரிக்கை!
Facebook கணக்கு Hack செய்யப்பட்டதாகக் கூறி உதவி வழங்குவதாகத் தொடர்புகொள்ளும் நபர்களிடம் உங்கள் கடவுச்சொல், சரிபார்ப்புக் குறியீடு (OTP) அல்லது மீட்புக் குறியீடுகளைப் பகிர வேண்டாம். கணக்கை மீட்டெடுப்பதற்காக அதிகாரப்பூர்வ Facebook வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.
