கனடாவில் சிறிய கனிம ஆய்வு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண, கனிம ஆய்வு தொடர்பான வரிச் சலுகைகளை விரிவுபடுத்த வேண்டும் எனப் பல மாகாணங்களும் பிரதேசங்களும் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
கனடாவின் 2025ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, முக்கிய கனிமத் திட்டங்களுக்கான பொறியியல், தொழில்நுட்ப மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுச் செலவுகளையும் வரிச் சலுகைக்குத் தகுதியான செலவுகளாகச் சேர்ப்பதாக லிபரல் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
எனினும், 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், கனிம வளத்தின் பொருளாதாரச் சாத்தியக்கூறு மற்றும் பொறியியல் நடைமுறைச் சாத்தியத்தை மதிப்பிடுவதற்கான செலவுகள், கனடிய கனிம ஆய்வுச் செலவுகளுக்கான வரி விலக்குத் தகுதியில் அடங்காது என அரசாங்கம் தெளிவுபடுத்தியது. இதனால், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
கனிம ஆய்வு சங்கம் முன்னெடுத்துள்ள இந்தப் பிரசாரத்திற்கு நோவா ஸ்கோடியா, மேனிடோபா, சாஸ்காட்செவன், ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் யூகான் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
கனிம ஆய்வு நிறுவனங்கள் புதிய கனிம வளங்களைக் கண்டுபிடித்த பின்னர், அவற்றை வணிக ரீதியாகச் சுரங்கங்களாக மாற்றுவதற்குப் பல கட்ட தொழில்நுட்ப ஆய்வுகளையும் பொறியியல் மதிப்பீடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்தக் கட்டத்தில் அதிக செலவுகள் ஏற்படுவதுடன், முதலீடுகளைப் பெறுவதிலும் நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றன. சுரங்கத் துறையில் இந்த நிதி நெருக்கடியான கட்டம் ‘மரணப் பள்ளத்தாக்கு’ என அழைக்கப்படுகிறது.
கனிம ஆய்வு சங்கத்தின் தலைவர் டாட் ஸ்டோன் தெரிவிக்கையில், தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் சாத்தியக்கூறு மதிப்பீடுகளுக்கான செலவுகளை வரிச் சலுகைக்குத் தகுதியானவையாக மாற்றுவது, சிறிய நிறுவனங்கள் தங்களது திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்க உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இத்தகைய மாற்றங்கள் கனடாவின் கனிம ஆய்வுத் துறையில் முதலீடுகளை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், மத்திய அரசாங்கம் ஏற்கெனவே முக்கிய கனிம ஆய்வுக்கான வரிச் சலுகைகளை 12 கூடுதல் கனிமங்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்வைத்துள்ளது. மேலும், நிறுவனங்கள் புதிய உபகரணங்களில் முதலீடு செய்வதற்கும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் உதவும் வரிச் சலுகைகளையும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், இந்த நடவடிக்கைகள் மட்டும் சுரங்கத் திட்டங்களின் ஆரம்ப வளர்ச்சிக் கட்டத்தில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை முழுமையாகத் தீர்க்காது எனத் துறைசார் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
எனவே, கனிம ஆய்விலிருந்து உற்பத்தி நிலைக்குச் செல்லும் திட்டங்களுக்கு நிதி ஆதரவு வழங்கும் வகையில், பொறியியல் மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுச் செலவுகளையும் வரிச் சலுகைகளில் உள்ளடக்க வேண்டும் என்பதே கனிமத் துறையினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசாங்கம் எத்தகைய பதிலை வழங்கப்போகிறது என்பதும், எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் இதற்கான மாற்றங்கள் இடம்பெறுமா என்பதும் கனடாவின் கனிம வளத் துறையினரால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
