கியூபெக் (Quebec) மாகாணத் தேர்தலில் ‘கொஅலிஷான் அவனிர் கியூபெக்’ (Coalition Avenir Québec – CAQ) கட்சி சந்தித்த பாரிய தோல்வியைத்
தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரும் பதவியிலிருந்து விலகும் கியூபெக்கின் முதலமைச்சருமான கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) தனது கட்சித் தலைமைப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கியூபெக் மாகாணத் தேசிய சட்டசபையின் நுழைவு மண்டபத்தில் வைத்து, செய்தியாளர்களைச் சந்தித்த பிரெஷெட், இவ்விடயம் குறித்த தனது முடிவைத் தெரிவித்துள்ளார்.
”கியூபெக் மக்கள் தங்களின் முடிவை மிகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டார்கள்” எனவும் ”ஆட்சியை வேறொரு அணியிடம் ஒப்படைக்க மக்கள் தீர்மானித்துள்ளனர்” எனவும் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) கூறியுள்ளார்.
மக்களின் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதுடன், ‘கொஅலிஷான் அவனிர் கியூபெக்’ கட்சித் தலைவர் என்ற வகையில் இத்தோல்விக்கான
பொறுப்பையும் தாமே ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், எனவே ‘கொஅலிஷான் அவனிர் கியூபெக்’ கட்சியின் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கியூபெக் மாகாணத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த ‘கொஅலிஷான் அவனிர் கியூபெக்’ கட்சி, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.
அத்துடன் தனது அனைத்துத் தொகுதிகளையும் இழந்து, கியூபெக் சட்டசபையிலிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டுள்ளது.
பிரெஷெட் தனது சொந்தத் தொகுதியான துரோய்-ரிவியேரில் (Trois- Rivières) போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என முன்னர் கூறப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அவர் ‘கொஅலிஷான் அவனிர் கியூபெக்’ கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத் தக்கது.

